நாகர்கோவில், ஜூன் 2 –
கோடை விடுமுறை முடிந்து தமிழக முழுவதும் பள்ளிகள் நாளை மறுநாள் 4 ம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் காலை உணவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்காக முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் மாநகராட்சி வாட்டர் டேங்க் சாலையில் அமைந்துள்ள காலை உணவு திட்டத்திற்கான ஒருங்கிணைந்த மைய சமையற் கூடத்தை மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது சமையல் கூடத்தில் தூய்மை உணவு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களின் தரம் மற்றும் குறித்த நேரத்தில் பள்ளிகளுக்கு உணவு எடுத்து செல்வதற்கான வாகன வசதிகள் குறித்து அவர் விரிவாக கேட்டறிந்தார். மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு மிகவும் சுகாதாரமான முறையிலும், தரமானதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அலுவலர்களுக்கு ஆணையர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் சரோஜா, உதவி மாநகர பொறியாளர் ரகுராம் மற்றும் மாநகராட்சி முக்கிய அதிகாரிகள் உடன் இருந்தனர். ஆணையர் சமையல் செய்யும் இடத்தை பார்வையிட்டதுடன் அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.
நாகர்கோவில் மாநகராட்சி பொறுத்தவரை தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி எல்லைக்குள் உள்ள 48 அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் 19 அரசு உதவி வரும் பள்ளிகள் என மொத்தம் 67 பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இந்த மைய சமயக் கூடத்தில் இருந்து தினசரி காலை உணவு சமைத்து வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் மாநகராட்சி உள்ள மொத்தம் 5,443 மாணவ மாணவிகள் பயன்பெறுகின்றனர்.



