நாகர்கோவில், ஏப். 24 –
குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 1914 வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவுகள் நடைபெற்றன. இந்த வாக்கு சாவடிகளில் பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையமான நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கு இன்று காலை கொண்டுவரப்பட்டன.
விடிய விடிய வாக்கு பெட்டிகள் வந்த வண்ணம் இருந்தன. கோணம் கல்லூரியில் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தனித்தனியாக அறைகளில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வாக்கு பெட்டிகளை கொண்டு வர மொத்த 150 டெம்போக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு வாக்குபதிவு இயந்திரங்களைக் கொண்டு வந்தனர். அந்தந்த சட்டமன்ற தொகுதிகளுக்கான அறைகளில் வாக்குச்சாவடி எண் வாரியாக பெட்டிகள் வைக்கப்பட்டன.
மலையோரம் கிராமங்களில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்து சேர்வதில் தாமதமானது. குறிப்பாக விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதிகளில் இருந்து இன்று காலை வரை வாக்கு இயந்திரங்கள் வந்து கொண்டு இருந்தன. அந்தந்த அறைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட பின் இன்று காலையில் கலெக்டர், எஸ்பி மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் மேற்பார்வையில் வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன.
தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஒரு ஏடிஎஸ்பி, 2 டிஎஸ்பிக்கள், 6 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் மத்திய ரயில்வே படை உட்பட 100 போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் இருக்கும் வகையில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றி தற்காலிக பாதுகாப்பு டவர்களும் அமைக்கப்பட்டுள்ளன.



