கன்னியாகுமரி, ஏப். 13 –
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் விவசாயிகளின் தண்ணீர் பிரச்சினை மற்றும் மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண பழையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும்: அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரத்தை வெற்றி பெற செய்யுங்கள் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் தீவிர வாக்கு சேகரிப்பு
சுசீந்திரம் பழையாற்றில் இருந்து கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்கும் வகையில் தளவாய் சுந்தரம் மூலம் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுசீந்திரத்தில் வாக்காளர்களிடையே கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் வாக்குறுதி அளித்து வாக்கு சேகரித்தார். சுசீந்திரம் பகுதியில் கோயிலைச் சுற்றியுள்ள கடை வியாபாரிகள் மற்றும் பக்தர்களிடையே கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் வாக்கு சேகரித்தார். மேலும் சுசீந்திரம் பகுதியில் டிராக்டர் ஓட்டி விவசாயிகளிடம் அவர் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரம் ஜாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு எளிமையாக பழகுபவர். அவர் கன்னியாகுமரி தொகுதி முழுவதும் உள்ள இந்துக் கோயில்களுக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார். கிறிஸ்தவர்கள், முஸ்லீம்களுக்கும் பல்வேறு உதவிகளை அவர் செய்துள்ளார். மத நல்லிணக்கத்துக்கு அடையாளமான ஒருவராக அவர் உள்ளார்.
இன்றைக்கு வன்முறை சம்பவங்கள், கஞ்சா, போதைப் பொருட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சூழ்நிலையில், நல்லொழுக்கத்தை ஏற்படுத்தி சமத்துவமிக்கவராக தளவாய்சுந்தரம் உள்ளார். விவசாயத்தை நம்பி வாழும் மக்களுக்கு நெற்களை சேமித்து வைக்கும் நெல் கிடங்குகள், தென்னை விவசாயத்தை பாதுகாக்க நவீன திட்டங்களையும் செயல்படுத்த திட்டம் வகுத்துள்ளார்.
கன்னியாகுமரி தொகுதியில் கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம் வளராமல் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு அரணாக உள்ளார். இந்நிலையில் இத்தொகுதி அமைதிப் பூங்காவாக திகழவும், கயிறு திரிக்கும் தொழில் மற்றும் சுற்றுலாத் தொழில் மேம்பாடு பெறவும், ஏழை மாணவர்கள் கல்வி மேம்பாடு பெற்றிடவும், அவர்கள் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைத்திடவும் அவரை ஆதரிக்க வேண்டும்.
மேலும், சுசீந்திரம் பகுதியில் விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையான தடுப்பணை அமைக்கவும், பழையாற்றினை மாசுபடாமல் பாதுகாத்திடவும் நான் ஏற்கனவே அவரிடம் பேசியுள்ளேன். சட்டமன்றத்தில் அவரும் இது குறித்து பேசியுள்ளார். விவசாயிகளின் பிரச்சினை, பொதுமக்களின் குடிநீர் பிரச்சினைக்கு மீண்டும் உயிர் கொடுத்து விரைவில் நிரந்தர தீர்வு காண தளவாய்சுந்தரத்தை ஆதரிக்க வேண்டும் என பேசினார்.



