நாகர்கோவில்,ஏப்.05-
தமிழக வெற்றி கழகம் சார்பில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெர்வின் கிங்ஸ் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன் உட்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது: நாகர்கோவில் மாநகரில் தண்ணீர் பிரச்சினை தீராத பிரச்சினையாக இருந்து வருகிறது. கோடைகாலங்களில் பத்து நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே தேர்தலில் நான் வெற்றி பெற்றால் நாகர்கோவில் மாநகரில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்.
இதே போல மாநகர இளைஞர்கள் பலரும் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்று தான் த.வெ.க. தலைவர் விஜய் கூறியிருக்கிறார். அவரது அறிவுறுத்தலின்படி ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
நாகர்கோவில் புத்தேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூதாட்டி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். இதே போல பல சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் நடந்து வருகின்றன. இதையெல்லாம் சரி செய்ய நடவடிக்கை எடுப்பேன். அனைத்து மக்களும் எந்த நேரத்திலும் வெளியே செல்லும் வகையில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.
பெரிய பெரிய தலைவர்களை எதிர்த்து நான் போட்டியிடுகிறேன். அந்த தலைவர்கள் இதுவரை மக்களுக்கு எதையும் செய்யவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் இங்கு உள்ள எம்எல்ஏவும் சரி, அமைச்சரும் சரி எந்த விதமான வளர்ச்சி பணிகளையும் கொண்டு வரவில்லை. வாக்குறுதி மட்டும் கொடுக்கிறார்கள். அதை நிறைவேற்றுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.



