சுசீந்திரம், மார். 30 –
நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பாகரன். இவரது மனைவி சித்ரா (39). நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 12:30 மணியளவில், இவர்களது வீட்டு அருகே ஒரு கும்பல் தகராறு செய்து கொண்டிருந்தது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் முகமது சமீர் ஆகியோரை ஒரு கும்பல் துரத்தி வந்துள்ளது. உயிருக்கு பயந்து அவர்கள் சித்ராவின் வீட்டுக்குள் நுழைந்தனர். அவர்களைப் பின்தொடர்ந்து வந்த 4, 5 பேர் கொண்ட கும்பல், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த வீட்டின் பாத்ரூம் கதவு, பீரோ செல் போன் போன்ற பொருட்களை அடித்து நொறுக்கியது.
இதைத் தடுக்க முயன்ற சித்ரா, அவரது மகன் சுனில் மற்றும் மகள் ஜெயந்தி ஆகியோரை அந்த கும்பல் சரமாரியாகத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தது. இந்த மோதலில் சித்ரா உள்ளிட்ட 3 பேரும் பலத்த காயமடைந்தனர். மேலும் வீட்டின் கதவு, பீரோ மற்றும் செல்போன்கள் சேதமடைந்தன.
இது குறித்து சித்ரா சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அளித்த புகாரின் பேரில், சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனிஷ் லியோன் விசாரணை நடத்தினர். இதில் தொடர்புடைய செல்வகுமார், சக்தி, அஸ்வின், வேலு ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


