மார்த்தாண்டம், மார்ச் 19 –
மார்த்தாண்டம் அருகே மருதங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் தேவதாஸ் – வசந்தா தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் 2ம் மகள் விபிஷா (30) என்பவரை கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த அனு என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இவர்களுக்கு 11 மற்றும் 8 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விபிஷா கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டில் கடந்த 8 வருடங்களாக குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இதையடுத்து பெற்றோர் விபிஷாவை காஞ்சாம்பு புத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் ரதீஷ் என்பவருக்கு 2 வது திருமணம் செய்து வைத்தனர். ரதீஷ் உத்தரபிரதேச மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது 2 வது கணவர் ரதீஷையும் தனக்கு பிடிக்கவில்லை என்று விபிஷா கூறியுள்ளார்.
இதை அடுத்து கடந்த 13ம் தேதி 2 மகன்களை அழைத்து கொண்டு விபிஷா வெளியில் சென்றுள்ளார். பின்னர் கொல்லங்கோட்டில் உள்ள முதல் கணவர் அனு வீட்டில் 2 மகன்களை விட்டுவிட்டு அங்கிருந்து மாயமானார்.
இது குறித்து அறிந்த பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காதால், மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் அவரது தாயார் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


