நாகர்கோவில், மார்ச் 12 –
இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026ஐ முன்னிட்டு 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
தொடர்ந்து அலுவலர்களிடையே கலெக்டர் தெரிவிக்கையில்: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும். சட்டமன்ற வாரியாக தேர்தல் பணியில் ஈடுப்பட்டுள்ள தேர்தல் அலுவலர்கள், வேட்பாளர்களிடமிருந்து பெறப்படும் வேட்புமனுக்களை மிக உண்ணிப்பாக சரிபார்ப்பதில் முன்அனுபவம் உள்ள தனி வட்டாட்சியர்களை நியமிக்க வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் அமைத்துள்ள இறந்த தலைவர்களின் சிலைகளை மூடுவதை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உதவி தேர்தல் அலுவலர்கள் உங்கள் தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளின் விவரங்களை நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்பாடு குறித்து அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பதோடு, அந்த இயந்திரங்களை கையாளுவது குறித்தும் விளக்கிட வேண்டும்.
மாவட்டத்திற்கு 6 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப்பதிவிற்காக செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும், சட்டம் ஒழுங்கு தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பதற்றமான மற்றும் மிகவும் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்தும் தொடர்புடைய அலுவலர்கள் களஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினார்.
நடைபெற்ற கூட்டத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மவாட்ட வருவாய் அலுவலர் பூங்கோதை, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.



