திருப்பத்தூர், ஜூலை 9 –
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட திருமால்புரம் பகுதியில் உள்ள ஸ்ரீ கெங்கையம்மன் கோயிலின் 34-ஆம் ஆண்டு திருவிழா பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.
திருவிழாவையொட்டி அம்மனுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடனாக கூழ் அமுது படைத்து, ஊர்வலமாக எடுத்து வந்து வழிபட்டனர்.
புதன்கிழமை மாலை பம்பை மேளம், தாரை, தப்பட்டை முழங்க பூங்கரக ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலம் திருமால்புரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, பக்தர்களின் பக்தி முழக்கத்துடன் சிறப்பாக நடைபெற்றது.
திருவிழாவின் போது பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் ஆடுகள் மற்றும் கோழிகளை பலியிட்டு அம்மனை வழிபட்டனர். அதன் தொடர்ந்து பொங்கல் வைத்தல் மாவிளக்கு படைத்தல் இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. வேலூர் திருப்பத்தூர் ஆம்பூர் வாணியம்பாடி தேவலாபுரம், திருமால்புரம், வெங்கடாசமுத்திரம், வீராங்குப்பம் கரும்பூர் பள்ளித் தெரு உம்ராபாத் பேங்க் ஷாப், ஸ்டார் சிட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ கெங்கையம்மனை தரிசித்து அருள்பெற்றனர்.
இவ்விழாவையொட்டி சிவாச்சாரியார் சிவஸ்ரீ முத்து அர்ச்சகர் ஸ்ரீ கெங்கையம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகளை நடத்தினார். திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழாக்குழுவினர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.



