நாகர்கோவில், மார். 6 –
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 நடைபெறுவதையொட்டி, பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினருக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா துறைசார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் தொடர்பான புகார்கள் தெரிவிக்கும் பொதுமக்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் சிவிஜில் செயலி பதிவாகும் புகார்களை 15 நிமிடங்களுக்குள் அந்த இடத்திற்கு சென்று, நன்கு விசாரித்து குறிப்பிட்ட நேரத்திற்குள் அறிக்கையினை மேல் அலுவலர்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
தொடர்ந்து வாகன சோதனையின் போது பணம், மதுபானங்கள், ஆயுதங்கள், வாக்களார்களை கவரும் பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவைகள் கொண்டு செல்லப்படுகின்றவனா என்பது குறித்து கண்காணிக்க வேண்டும். தனிநபர் ஒருவர் ரூ.50,000 வரை எந்தவித ஆவணமும் இன்றி பணத்தை கொண்டு செல்லலாம். ரூ.50,000க்கு மேல் பணம் ரொக்கமாக கொண்டு செல்லும் பட்சத்தில் அதற்கான உரிய ஆவணம் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். ரூ.10,000க்கு மேல் மதிப்புடைய பரிசுப்பொருட்கள் உள்ளிட்டவைகள் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படின் அவற்றினை பறிமுதல் செய்ய வேண்டும்.
மேலும் ரூ.10 இலட்சத்திற்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்படும் நேர்கையில் எப்.எஸ்.டி அலுவலர்கள் தங்கள் வழக்குப்பதிவு செய்யாமல், அதுகுறித்து வருமானத்துறையினருக்கு தகவல் தெரிவித்து, அவர்களின் மூலமாக வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும். வாக்காளர்களை கவரும் வகையில் வேட்டி, சேலை, டி-சர்ட் உள்ளிட்டவைகள் வழங்கப்படுவது தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பானது என்பதால் அவற்றை வாகனங்களில் கொண்டு செல்கிறார்களா என்பதை கண்காணிப்பதோடு, கட்சி பிரச்சார கூட்டத்தின் போது காகித தொப்பி, முககவசம், துண்டு, ஸ்டீக்கர்கள், பேட்ச் ஆகியவற்றை கூட்டத்திற்கு வரும் நபர்களுக்கு விநியோகிக்கும் பட்சத்தில் உரிய ஆவணங்களுடன் கொண்டு செல்லலாம்.
வாகன சோதனையின் போது பறிமுதல் செய்யப்படும் பணம் குறித்து 24 மணி நேரத்திற்குள் மேல் அலுவலர்களுக்கு அறிக்கை செய்ய வேண்டும். குறிப்பாக கிள்ளியூர் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால், கூடுதல் கவனம் செலுத்தி சோதனை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.
நடைபெற்ற கூட்டத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பூங்கோதை, உதவி ஆட்சியர் பயிற்சி ராகுல்குமார் துறை அலுவலர்கள், பறக்கும் படையினர், கண்காணிப்பு குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



