மார்த்தாண்டம், ஜன. 12 –
கொல்லங்கோடு அருகே வெங்குளம்கரை என்ற பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (71). கேரள மாநிலம் திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவர் தற்போது குடும்பத்துடன் பெங்களூருவில் வசித்து வருகிறார். கடந்த 7ம் தேதி இவரது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. இதை பார்த்த பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதை அடுத்து நேற்று விஜயகுமார் கொல்லங்கோடு வந்து தனது வீட்டில் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 20 கிராம் தங்க காயின் ஒன்று, 8 கிராம் தங்க காயின் ஒன்று, 4 கிராம் தங்க காயின் இரண்டு உள்ளிட்ட சில நகைகள் உட்பட 8 பவுன் நகைகள் மற்றும் வெண்கல பாத்திரங்கள், பித்தளை குத்துவிளக்குகள் உள்ளிட்ட பல பொருட்களை திருடி சென்றது தெரிய வந்தது.
திருட்டுப் போன பொருட்களின் மதிப்பு சுமார் 10 லட்சம் என தெரிய வருகிறது. இது குறித்து விஜயகுமார் கொடுத்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


