நாகர்கோவில், ஜன.11-
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலில் மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்களுக்கு அரசு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கி வருகிற்று. இந்த மண்ணெண்ணெயை அதிக விலைக்கு கேரளாவுக்கு விற்பது வழக்கம். இதை தடுக்க மாவட்ட போலீஸ் நிர்வாகம், வட்ட வழங்கல் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இடுப்பினும் மண்ணெண்ணெய் கடத்தல் தொடர்கிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் பாரதி தலைமையில் ஓட்டுனர் ஜாண் பிரைட் உள்ளிட்ட பறக்கும் படை குழுவினர் முட்டம் பகுதியில் பொது வினியோக திட்ட கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் இருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்து கொண்டு இருந்த டாடா சுமோ சொகுசு வாகனத்தை நிறுத்தும் படி சைகை காட்டினர். ஆனால் வாகனம் நிற்காமல் விரைந்து சென்றது. இதையடுத்து வாகனத்தை துரத்தி சென்று இரணியல் அருகே வள்ளி ஆற்றுப்பாலம் பகுதில் மடக்கி பிடித்தனர். அப்போது ஓட்டுனர் தப்பி ஓடினார்.
பின்னர் வாகனத்தை சோதனை செய்ததில் அதில் சுமார் 1200 லிட்டர் மீனவர்களுக்கு மானியவிலையில் அரசால் வழங்கப்படும் வெள்ளை நிற மண்ணெண்ணெய் இருந்தது. இதை கேரளா மாநிலத்திற்கு கடத்தி செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு மண்ணெண்ணெய் கைப்பற்றப்பட்டது.
கைப்பற்ற பட்ட வெள்ளை நிற மானிய விலை மண்ணெண்ணெயை தூத்தூர் மீனவர் கூட்டுறவு சங்க கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடத்தல் வாகனம் கைப்பற்றப்பட்டு விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. சம்பவம் தொடர்பாக அதிகாரிகளால் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.



