விளாத்திகுளம், ஜனவரி 08 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் 4 வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் இன்று இயற்கை உபாதை கழிப்பதற்காக பள்ளியின் கழிவறைக்கு அச்சிறுமி செல்லும் போது, பள்ளி வளாகத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்த காடல்குடி கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரது மகன் கருமுருகன் (25), சிறுமியின் கையைப்பிடித்து இழுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதோடு செல்போனானில் ஆபாச புகைப்படங்களை காட்டி அத்துமீறியுள்ளான்.
பின் அங்கிருந்து தப்பி ஓடி வந்த சிறுமி இதுபற்றி பள்ளி தலைமை ஆசிரியையிடம் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியை, பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன்பேரில், போலீசார் கட்டுமான தொழிலாளியான கருமுருகனை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



