திருத்துறைப்பூண்டி, ஜனவரி 5 –
திருத்துறைப்பூண்டி தாலுகாவில் காலியாக உள்ள 8 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு
விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 8 பணியிடங்களுக்கு 626 பேர் விண்ணப்பித்திருந்தனர். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு
எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்விற்கான அழைப்பாணை அனுப்பப்பட்டது. அழைப்பாணை கடிதத்தில் டிசம்பர் 21 எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு (நேர்முகத் தேர்வு)
முறையே ஜனவரி 4,5,6 தேதிகளில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி, டிசம்பர் 21 ம் தேதி நடைபெற்ற எழுத்து தேர்வில் 469 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். 157 பேர் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் எழுத்து தேர்வை தொடர்ந்து,
நேற்று, இன்று, நாளை (ஜனவரி-4,5,6) தேதிகளில் நடைபெற இருந்த நேர்முகத் தேர்வு
ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வட்டாட்சியர் அலுவலக கதவில் மட்டும் சிறிய அளவில் ஒட்டப்பட்டிருந்தது.
நேர்முக தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது தொடர்பாக தேர்வர்களுக்கு வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து எவ்வித தகவலும் தெரிவிக்காததால், வெளியூர்களிலிருந்து வந்த
100-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் வட்டாட்சியர் அலுவலகம் பூட்டப்பட்டிருப்பதை கண்டு
விரக்தியுடன் திரும்பி சென்றனர்.
இது குறித்து திரும்பி சென்ற தேர்வர்கள் கூறுகையில், ஒத்திவைக்கப்பட்டதாக தபால் மற்றும் போன் கால் மூலம் எங்களுக்கு முறையாக தகவல் தெரிவித்திருந்தால் நாங்கள் வந்திருக்க மாட்டோம். சென்னை, காரைக்குடி உள்ளிட்ட வெளியூர்களில் சொற்ப சம்பளத்திற்கு வேலை பார்த்து கொண்டிருந்தோம்.
அரசு வேலை கிடைக்கும் என்ற ஆசையில் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்காக
வேலையை விட்டு, ஒரு நாள் ஊதியத்தை இழந்து பேருந்துக்கு செலவு செய்து
கைக்குழந்தையோடு வந்துள்ளதாகவும் தற்போது ஒத்திவைப்பட்டுள்ளதா அல்லது ரத்து செய்யப்பட்டதா என தெளிவாக கூறினால் நாங்கள் மீண்டும் மீண்டும் ஏமாறமாட்டோம் என வேதனையுடன் தெரிவித்தனர்.



