நாகர்கோவில், ஜன. 01 –
நாகர்கோவில் பூரண சுவிசேஷ பெந்தெகொஸ்தே சபையின் புது வருட ஆராதனை கன்கார்டியா பள்ளி மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆராதனையில் சபையின் போதகர் ஜாண்சாம் ஜாய்சன் புது வருட வாக்குத்தத்த செய்தி அளித்தார். முன்னதாக பாடல் மற்றும் துதி ஆராதனையை போதகர் டேவிட்சாம் ஜாய்சன் மற்றும் சகோதரர் பால்சாம் ஜாய்சன் ஏறெடுத்தனர். சகோதரர் பென்சாம் ஜாய்சன் புதுவருட வாழ்த்து செய்தி அளித்தார்.
புது வருட வாக்குத்தத்தமாக, “நீர் உம்முடைய கையை திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும் (சங்கீதம் 104:28)” என்ற வசனத்தின்படி இந்த ஆண்டு திருப்தியின் ஆண்டாக இயேசு மாற்ற போகிறார் என்ற வாக்குத்தத்தம் அளித்து புது வருட ஆராதனைக்குள் திரளான ஜனங்களை நடத்தி சென்று தேவ செய்தி அளித்தபோது,”திருப்தி என்றால் மனநிறைவு அல்லது போதுமென்கிற உணர்வு அல்லது குறைவு இல்லாத நிலை. எல்லாவற்றையும் சிருஷ்டிக்கிற தேவனால் மட்டுமே நமக்கு திருப்தியை அளிக்க முடியும். தேவன் பூமியை பார்த்தபோது அது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது. அதன் பின் எல்லாவற்றையும் சிருஷ்டித்து பூமியை நிறைவாக்கி எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்பினார். பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது. உங்கள் வாழ்க்கையில் கையை திறந்து தேவன் திருப்தியாக்குவார். யார் வாழ்க்கையில் தேவன் நிறைவை தருகிறாரோ அவர்கள் தேவனுக்குரியவர்கள். நீங்களும் உங்கள் குடும்பமும் கர்த்தரையே சேவிப்போம் என ஒப்புக்கொடுங்கள்.
யார் வாழ்க்கையில் கர்த்தர் திருப்தியை கட்டளையிடுகிறார்? கர்த்தரை தேடுகிறவர்களுக்கும், கர்த்தரை விட்டு விலகாதிருக்கிறவர்களுக்கும், கிறிஸ்துவின் நிமித்தம் உலக மேன்மையை இழக்கிறவர்களுக்கும் திருப்தியை கட்டளையிடுவார்; கர்த்தரை தேடுகிறவர்களுக்கு நன்மையினால் திருப்தி, சந்தோஷத்தினால் திருப்தி, கிருபையினால் திருப்தி, நீடித்த நாட்களால் திருப்தி, தேவ சாயலால் திருப்தியை அளிக்கிறார். தேவனை அதிகாலையில் முதலாவது தேடுங்கள். வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் மேலாக தேவனுக்கு முதலிடத்தை கொடுங்கள். அதிகாலையில் தேவனுடைய பாதத்தில் ஆயத்தமாக காத்திருங்கள். தேவனுக்கு கொடுக்கும் இடத்தை வேறு யாருக்கு கொடுத்தாலும் அது விக்கிரகாராதனையாக மாறி விடும்.
இல்லை என்கிற சூழ்நிலையிலும் தேவனை விட்டு விலகாதவர்களை திருப்தியாக்கி மீதம் எடுக்க வைக்கப் போகிறார். கொஞ்ச பெலன் இருந்தும் தேவனுடைய நாமத்தை மறுதலியாமல் இருக்கிறவர்களுக்கு திறந்த வாசலை முன்பாக வைக்கிறார். கிறிஸ்துவை மறுதலித்து கிடைக்கும் உலக நன்மைகள் நமக்கு வேண்டாம். கிறிஸ்துவின் நிமித்தம் இழந்தவர்கள் தரித்திரரான சரித்திரம் இல்லை. கிறிஸ்துவுக்காக எல்லாவற்றையும் இழந்து வந்தவர்களுக்கு தேவன் தம்முடைய எல்லா தயவையும் பாராட்டுகிறார்.
தேவனை தேடுகிறவர்களாக, தேவனை விட்டு விலகாதவர்களாக மட்டுமல்ல, கிறிஸ்துவுக்காக எதையும் இழக்கிற மனம் வேண்டும். கிறிஸ்துவுக்காக எதையாகிலும் இழக்கிறவர்களை எல்லாம் பெற்றவர்களாக பரிபூரணம் அடைய செய்து சாட்சியாய் நிறுத்துவார்.” இவ்வாறு அவர் பேசி ஆசீர்வதித்தார்.
இந்த புது வருட ஆராதனைக்கு குமரி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு புது வருட ஆசீர்வாதத்தை பெற்று சென்றனர்.



