நாகர்கோவில், டிசம்பர் 31 –
மார்த்தாண்டம் ஜேக்கப் தெருவை சேர்ந்தவர் அல்ஜின் டேனி (38). இவர் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். தற்போது பார்வதிபுரம், கிறிஸ்டோபர் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். டாக்டர் அல்ஜின் டேனி, அவரது மனைவி ஆகியோர் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்காக கடந்த 23ஆம் தேதி கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள காஞ்சிரப்பள்ளிக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அல் ஜின் டேனியின் அண்ணன் அவருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனை அடுத்து அவர் வீட்டில் வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 16 பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து ஆசாரிபள்ளம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்வுகளும் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்தனர். இதில் இரண்டு இடங்களில் கைரேகைகள் சிக்கி உள்ளன. கொள்ளை நடந்த டாக்டர் வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் இல்லை. மேலும் அந்த பகுதியில் உள்ள மற்ற வீடுகளில் இருக்கும் கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே ராஜாக்கமங்கலம் அருகிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை பிரார்த்தனைக்கு சென்று இருந்த ஒரு வீட்டில் கொள்ளை நடந்தது. அதே கும்பல் தான் இங்கும் கைவரிசை காட்டி இருக்குமா? என சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாகவும் இரு இடங்களிலும் பதிவான கைரேகைகளை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் இரண்டு தனிப்படையினர் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.


