மார்த்தாண்டம், டிச. 27 –
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு குழித்துறையில் உள்ள தனது குடும்ப வீட்டை நூலகமாக மாற்றி, அதில் மத்திய மாநில அரசு வேலைகளுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார். மேலும் தனது உறவினர்கள், நண்பர்கள் துணையோடு இது போன்று அவர் படித்த குழித்துறை அரசு பள்ளியில் இலவசமாக காவலர்கள் பயிற்சி அளித்து வருகிறார்.
இவரது தாய் தந்தை ரெத்தினம்மாள் – செல்லப்பன் பெயரில் குழித்துறை குடும்ப வீட்டில் நடத்தும் நூலக 3-வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபு மாணவர்கள் மத்தியில் பேசுகையில்: நான் இந்த வீட்டில் இருந்து படித்து வங்கி பணி கிடைத்தது. சென்னையில் வங்கி பணி செய்து மேல்படிப்பு படித்து, தமிழகத்தின் உயரிய பணியான டிஜிபி ஆனேன். தமிழக முதல்வர்கள், இந்திய பிரதமரிடம் பேசவும் அவர்களோடு உணவு உண்ண வாய்ப்பு கிடைத்தது.
படித்தால் முன்னேறலாம். நான் முடிந்த அளவில் இந்த நூலகத்தில் பல புத்தகங்களை வைத்து உள்ளேன். மத்திய மாநில அரசு வேலைகளுக்கு இலவசமாக பயிற்சி அளிககப்பட்டு வருகிறது. அனைத்து ஏழை மாணவர்கள் பயன் படுத்துங்கள். பண்டை காலங்களில் ஐம்பது சதவீதம் பேர் படிக்க பணம் இல்லாமல் தவித்தனர். ஆனால் தற்போது சில சதவீதம் மட்டுமே படிக்க பணம் இல்லாமல் தவிக்கின்றனர். மாணவர்கள் பல புத்தகங்களை வாசிக்க வேண்டும். சாதிக்க வேண்டும் என்று பேசினார்.



