திருவட்டார், டிச. 27 –
திருவட்டார் அருகே ஆற்றூரில் உள்ள ராமநல்லூர் காவு கோவிலை சீரமைத்து பக்தர்கள் வழிபட அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருவட்டார் பாலத்திலிருந்து மூவாற்றுமுகம் செல்லும் வழியில் ஆற்றூர் ராமநல்லூர் காவு கோவில் உள்ளது. சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியின் நடுப்பகுதியில் காவு கோவில் உள்ளது.
நான்கு புறமும் சுவர் கொண்ட கூரை இல்லாத இடத்தில் இந்த காவுக்கோவில் உள்ளது. இந்த காவுக்கோயிலின் உள்ளே சாஸ்தா, விநாயகர் சிலைகள் உள்ளன. சுசீந்திரம் இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத கோவில்கள் நிர்வாகத்தில் உள்ள 490 கோவில்களில் 321.வது கோவிலாக இக்கோவில் உள்ளது.
திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலுடன் தொடர்புள்ள 12 காவுக்கோவில்களில் ஒன்றாக திகழும் ராமநல்லூர் காவு கோவிலில் முன்பு பூஜைகள், வழிபாடுகள் முறையாக நடந்து வந்தது. ஆனால் தற்போது எந்த விதபராமரிப்புகளும் இன்றி பாழடைந்த நிலையில் காணப்படும் இந்த கோவிலில் வளாகத்தின் சில பகுதிகளை சிலர் ஆக்கிரமித்து, நிலத்தை பயனபடுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்த கோவிலுக்கு யாரும் சென்று வர முடியாத நிலையில் புதர்கள் சூழ்ந்து காணப்படுகிறது.
2018.ம் ஆண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தனி நபர் ஒருவர் வழக்குத்தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 8 வாரகாலத்துக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது. ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்றாத நிர்வாகத்தினர், ஆக்கிரமிப்பாளர்கள் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இப்போது நடந்து வருகிறது.
பழமை வாய்ந்த இந்த காவுக்கோவிலை புனரமைத்து பக்தர்கள் வழிபட நடவடிக்கைகள் மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறை முன்வரவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



