நாகர்கோவில், டிச. 16 –
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் பேரூராட்சிகள் துறை சார்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா தலைமை வகித்தார். அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில்: அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் 2021-22 மற்றும் 2023-24ன் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட பேரூராட்சிகளில் 2392 பயனாளிகளுக்கு ரூ.5023.20 இலட்சம் மதிப்பீட்டில் பணி உத்தரவு வழங்கப்பட்டு 1659 பயனாளிகள் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு, 733 பயனாளிகள் வீடுகள் முன்னேற்றத்தில் இருந்து வருகிறது.
அதனடிப்படையில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (2.0) 2025-26 கீழ் மாவட்டத்திற்குட்பட்ட அகஸ்தீஸ்வரம் பேரூராட்சியில் 24, அருமனை பேரூராட்சியில் 29, கடையால் பேரூராட்சி 40, கோதநல்லூர் பேரூராட்சி 16, மயிலாடி பேரூராட்சி 37, பொன்மனை பேரூராட்சி 26, புதுக்கடை பேரூராட்சி 23, திற்பரப்பு பேரூராட்சி 35, திருவட்டார் பேரூராட்சி 32, வாள்வச்சகோஷ்டம் பேரூராட்சி 28, வேர்கிளம்பி பேரூராட்சி 39, விலவூர் பேரூராட்சி 50 என ஆக மொத்தம் 12 பேரூராட்சிகளுக்குட்பட்ட 386 பயனாளிகளுக்கு தலா ரூ.2.50 இலட்சம் வீதம் ரூ.9.65 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் சுமார் 2000 வீடுகளும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சரின் மறுகட்டுமான திட்டத்தின் கீழும் வீடுகள் கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டு வருகிறது என பேசினார். நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் என்.சுரேஷ் ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி ரெ.மகேஷ், பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் பாண்டியராஜன், செயல் அலுவலர்கள், துறை அலுவலர்கள், பணியாளர்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



