சென்னை, டிசம்பர் 11 –
நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளரும், கலப்பை மக்கள் இயக்கத் தலைவருமான பி.டி. செல்வகுமார், இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யுடன் சுமார் 27 ஆண்டுகள் மேலாளராகப் பணியாற்றியவர் பி.டி. செல்வகுமார். இவர் கலப்பை மக்கள் இயக்கம் என்ற அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார். சமீப காலமாக, பி.டி. செல்வகுமார் நடிகர் விஜய்யைப் பற்றிய சில விமர்சனங்களை முன்வைத்து பேட்டிகள் அளித்து வந்தார். இந்தச் சூழலில், இன்று பி.டி. செல்வகுமார், தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக தி.மு.க.வில் இணைந்தார்.
தி.மு.க.வில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பி.டி. செல்வகுமார், “விஜய் ஒரு நடிகர். அவரோடு பணியாற்றும் போது அவர் சிறப்பாக பணியாற்றுவார் என்ற எண்ணத்தில் நானும் அவர் கூட இருந்து கட்டமைத்தவன் தான். இந்த கலப்பை மக்கள் இயக்கம் எப்படி கட்டமைத்து அதை ஒழுங்காக நடத்துகிறேனோ அதுபோல விஜய் மக்கள் இயக்கத்திற்கும் நான் ஒரு மிகப்பெரிய ஒரு தூணாக இருந்து பணியாற்றியவன் என்று அவர்களே சொல்லி இருக்கிறார்கள். காலப்போக்கில் புதிதாக அநேகர் உள்ளே வருகிறார்கள். அப்படி புதிதாக வருபவர்களால் எங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் அங்கு தொடர முடியாத ஒரு சூழல் ஏற்படுகிறது. என்றைக்குமே நிலவு நிலவுதான். விஜய் ஒரு நிலவு மாதிரி தான். 15 நாளில் நிலவு எப்படி மறைந்து போகுமோ அப்படியே நடிகர்களுடைய சேவையும் இருக்கும்.
மக்களையும், ரசிகர்களையும் சரியான வழியில் நடத்தி அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வாரா என்பது எனக்கு தெரியவில்லை. என்னுடைய ஆசை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான். என் உயிர், பொருள், ஆவி அனைத்தும் தமிழக மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அதற்கு ஒரு நல்ல கட்டமைப்பு தேவைப்பட்டது. இன்றைக்கு இருக்கும் சூழலில் அந்த கட்டமைப்பு திமுகவில் உள்ளது. திமுக மிகச் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றனர். அதனால் தான் என்னையும் திமுகவில் இணைத்துக் கொண்டேன்”. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்வில் திமுக குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ் மற்றும் கலப்பை மக்கள் இயக்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



