நாகர்கோவில், நவ. 24 –
தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. புனித சவேரியார் பேராலய திருவிழாவின் முதல் நாளான இன்று கோட்டாறு மறை மாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஜாண் ரூபஸ் தலைமையில் திருக்கொடியேற்றம் மற்றும் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.
வரும் டிசம்பர் 3ம்தேதி வரை நடைபெறும் 10 நாள் திருவிழாவில் தினமும் காலை மற்றும் மாலையில் சிறப்பு திருப்பலிகள், ஆடம்பர கூட்டு திருப்பலிகள் நடக்கின்றன. 8ம் திருநாளான டிசம்பர் 1ம்தேதி மாலை 6.30 மணிக்கு ஆடம்பர கூட்டுத்திருப்பலி முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் நடைபெறுகிறது. இரவு 10.30 மணிக்கு முதல் நாள் தேர் பவனி நடக்கிறது. பின்னர் டிசம்பர் 2ம்தேதி 9ம் திருநாள் அன்று ஆயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு மாலை ஆராதனையும், இரவு 10.30 மணிக்கு தேர்ப்பவனியும் நடக்கிறது.
டிசம்பர் 3ம் தேதி 10ம் திருநாளை முன்னிட்டு காலை 6 மணிக்கு பெருவிழா திருப்பலி ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு மலையாள திருப்பலி திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேரருட்பணி கிளாடின் அலெக்ஸ் தலைமையில் நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு தேர் பவனியும், மாலை 7 மணிக்கு தேரில் ஆடம்ப கூட்டுத் திருப்பலி குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ் தாஸ் தலைமையிலும் நடைபெறுகிறது.
திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 3ம் தேதி மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது. டிசம்பர் 8ம் தேதி மாலை 5 மணிக்கு திருக்கொடியிறக்கமும், புனிதர்கள் திருப்பண்டம் முத்தம் செய்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். திருவிழா நாட்களில் மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை தமிழ், ஆங்கிலம், மலையாளம் மொழிகளில் அருட்சாதனம் வழங்கப்படும்.
கோட்டாறு புனித சவேரியார் பேராலய பங்குதந்தை பஸ்காலிஸ், இணை பங்கு பணியாளர் பால் கால்வெர்ட், பங்கு அருட்பணி பேரவை செயலாளர் ராஜன், உப தலைவர் வர்க்கீஸ் ராஜா, பொருளாளர் ராபின், இணை செயலாளர் ஜேசுராஜா மற்றம் பங்கு மக்கள் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். முதல் நாளான இன்று இரவு காவல்துறை சார்பில் திருவிழா நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
திருவிழாவையொட்டி கோட்டார் காவல் நிலைய சந்திப்பு முதல் சவேரியார் கோயில் சந்திப்பு வரையிலும் கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. கோட்டார் சவேரியார் கோயில் சந்திப்பில், மாநகராட்சி சார்பில் வடிகால் அமைக்கும் பணி வியாபாரிகள் சார்பில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.



