கருங்கல், அக். 21 –
கருங்கல் அருகே பாலூர் பகுதியை சேர்ந்தவர் ஆல்வின். தனியார் பள்ளி ஆசிரியர். அவரது வீட்டில் கடந்த மாதம் 18 பவுன் தங்க நகைகள் கொள்ளை போனது. இது குறித்து கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி பாலூர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (50) என்பவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதை அடுத்து பிடிபட்ட நபரை குமரி அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள தயா கேந்திர இல்லத்தில் தங்க வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் போலீசாரை ஏமாற்றிவிட்டு ஜெயக்குமார் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதற்கு இடையே தலை மறைவானவர் பெங்களூருவில் இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தடர்ந்து குளச்சல் ஏ எஸ் பி ரேகா மற்றும் தனிப்படை எஸ்ஐ தனுஷ் லியோ தலைமையிலான போலீசார் பெங்களூரு விரைந்தனர். பின்னர் நண்பன் வீட்டில் இருந்த கொள்ளையனை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தினர்.
இது குறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், ஜெயக்குமார் சில நகைகளை நாகர்கோவில் உள்ள ஒரு கடையில் விற்று அந்த பணம் மூலம் பெங்களூர் நண்பர் வீடு சென்றதாக தெரிய வருகிறது. மொத்தம் 15 பவுன் நகையை போலீசார் மீட்டனர். பின்னர் ஜெயக்குமாரை தக்கலை கோட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.



