நாகர்கோவில், அக். 13 –
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் நாகர்கோவில் மண்டலம் சார்பில் ரூ.19.74 கோடி மதிப்பில் 21 புதிய தாழ்தள சொகுசு பேருந்துகளை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று வடசேரி பஸ் நிலையத்தில் நடந்தது. கலெக்டர் அழகு மீனா தலைமை வகித்தார். பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் கொடியசைத்து துவக்கிவைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: அரசு போக்குவரத்துக் கழகம் நாகர்கோவில் மண்டலத்தில் 438 நகர பேருந்துகளும் 299 புறநகர் பேருந்துகளும் என மொத்தம் 737 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இப்பேருந்துகளில் நாளொன்றுக்கு சுமார் 10.30 லட்சம் மக்கள் பயணம் செய்து வருகின்றனர். கடந்த 07.05.2021 அன்று மகளிர் விடியல் பயண பேருந்து திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக 368 நகர பேருந்துகள் ”மகளிர் விடியல் பயண பேருந்துகளாக” இயக்கப்பட்டு வருகிறது. தற்போது நமது கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பயனடையும் வகையில் 21 புதிய சொகுசு தாழ்தள பேருந்து சேவை துவங்கி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது குமரி மாவட்டத்தில், வடசேரி – மார்த்தாண்டம் வழித்தடத்திற்கு 6 சொகுசு தாழ்தளப்பேருந்துகளும், வடசேரி – கன்னியாகுமரி வழித்தடத்திற்கு 5 சொகுசு தாழ்தளப்பேருந்துகளும், மார்த்தாண்டம் – குலசேகரம் – கடையாலுமூடு வழித்தடத்திற்கு 1 சொகுசு தாழ்தளப்பேருந்தும், பார்வதிபுரம் சர்க்குலர் வழித்தடத்திற்கு 3 சொகுசு தாழ்தளப்பேருந்துகளும், அண்ணா பேருந்துநிலையம் முதல் இராஜாவூர் வழித்தடத்திற்கு 1 சொகுசு தாழ்தளப்பேருந்தும், வடசேரி – கூடன்குளம் வழித்தடத்திற்கு 2 சொகுசு தாழ்தளப்பேருந்துகளும், அண்ணா பேருந்துநிலையம் – குளச்சல் வழித்தடத்திற்கு 3 சொகுசு தாழ்தளப்பேருந்துகள் என மொத்தம் 21 புதிய சொகுசு தாழ்தளப்பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது என கூறினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் சுரேஷ்ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) மேலாண்மை இயக்குநர் நடராஜன், நாகர்கோவில் மண்டல பொது மேலாளர் பாலசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



