தருமபுரி, அக்டோபர் 04 –
தருமபுரி காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு காந்தியடிகள் திருஉருவப்படத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தீபாவளி சிறப்பு கதர் விற்பனையை துவக்கி வைத்து அவர் கூறியதாவது: இந்திய நாட்டின் விடுதலை மற்றும் முன்னேற்றத்திற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்த காந்தியடிகளின் நினைவை போற்றும் வகையில் ஆண்டு தோறும் அக்டோபர் 2 தேதி காந்தி ஜெயந்தி தினமாக கொண்டாடப்படுகிறது.
கடந்த ஆண்டைப் போலவே நலப் ஆண்டுக்கும் மாநில அரசு மற்றும் கதர் கிராம தொழில்கள் ஆணையக் குழுவினரால் கதர் விற்பனைக்காக தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. விற்பனை நிலையத்தில் காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளியை யொட்ட சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறுகிறது.
கதர் ஆடை வாங்குவதன் மூலம் ஏழை கதர் நூற்பாளர்களை காக்க முடியும். எனவே அரசு துறை அலுவலர்கள், பணியாளர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் குறைந்தபட்சம் ஒரு கதர் ஆடையாவது வாங்கி ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் காதி கிராப்ட் மேலாளர் செல்வம், ஆய்வாளர் ஜெயக்குமார், முன்னாள் மேலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



