தென்காசி, செப். 30 –
நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் அதிர்ஷ்ட லெட்சுமிகளை வழிபடும் விதமாக நவராத்திரி கொலு திருவிழா 9 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
இதே போன்று இந்த ஆண்டிற்கான நவராத்திரி கொலு திருவிழா கடந்த 22ம் தேதி அன்று திருக்கோவில்கள், இல்லங்களில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது.
நவராத்திரி கொலு திருவிழாவில் தினமும் அம்பாள் ஒவ்வொரு அலங்காரத்தில் வடிவமைக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வகையில் பூஜைகள் நடத்தப்படும்.
இதே போன்று தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் உள்ள அருள்மிகு வெண்ணிமலை முருகன் கோவில் மண்டபத்தில் நவராத்திரி கொலு விழாவிற்காக 9 அடுக்குகளை கொண்ட இரு காலரிகள் அமைக்கப்பட்டு அதில் சிவன், விஷ்ணு, பள்ளி கொண்ட பெருமாள், சாய்பாபா, வணிகம் செய்யும் வியாபாரி, தலையாட்டி பொம்மை, திருமண விழாக் கோலம், கைலாயத்தில் வீற்றிருக்கும் சுவாமிகள், பிரம்மா, சிவலிங்கம், குதிரைகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு கொலு விழாவின் 7ம் நாளில் அம்மன் துர்க்கையாக அலங்காரம் செய்யப்பட்டு சிவாச்சாரியார் வேதமந்திரங்கள் முழங்க சுவாமி, அம்மன் மற்றும் கொலு பொம்மைகளுக்கு மஹா தீபாராதனை நடத்தப்பட்டது.
நவராத்திரி கொலு சிறப்பு வழிபாட்டில் பாவூர்சத்திரம் மற்றும் சென்னையில் இயங்கி வரும் டாக்டர் சுவேதாவின் நக்சத்திரா கலைக் குழுவை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவிகள் மாங்குடி காமாட்சி அம்மன், மதுரை மீனாட்சி அம்மன், சமயபுரம் மாரியம்மன், திருமயிலை ஜெகந்தா, ரத்தினகிரி பாலமுருகன் மற்றும் சிவன், பார்வதி, முருகர், கிருஷ்ணர் உள்ளிட்ட பல்வேறு வேடிங்களில் மாணவிகளின் பரதநாட்டியம் நடைபெற்றது. இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி, அம்பாளை தரிசனம் செய்ததுடன் பரதநாட்டிய நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.



