புதுக்கடை, ஏப்- 13
குமரி மாவட்டம் கடற்கரை கிராமங்களில் மீன்பிடிக்கும் தொழிலாளர்களுக்கு அரசு மானிய விலை மண்ணெண்ணெய் வழங்கி வருகிறது. இந்த மண்ணெண்ணெய் கடத்தி கேரளாவுக்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை தடுக்க சம்மந்தபட்ட துறை அதிகாரிகள், போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் புதுக்கடை அருகேயுற்ற பார்த்திபபுரம் பகுதியில் பறக்கும் படை தனி வட்டாட்சியர் கு.ம. பாரதி தலைமையில், வட்ட வழங்க வருவாய் ஆய்வாளர் சஜித் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதி வேகமாக சென்ற தோஸ்த் வாகனத்தை நிறுத்த முயன்றனர். ஆனால் நிற்காமல் சென்ற வாகனத்தை துரத்தி சென்று பிடித்து சோதனை இட்டனர்.
இதில் சுமார் 86 கேன்களில் 3 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை கேரளாவுக்கு கடத்தி செல்வது தெரிய வந்தது. வாகனத்தை ஓட்டிய ஓட்டுநர் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். அதிகாரிகள் வாகனத்தை பறிமுதல் செய்து கிள்ளியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.