அனுப்பர்பாளையம், ஜூலை 30 –
அ.தி.மு.க. திருப்பூர் சிறுபூலுவப்பட்டி பகுதி சார்பில் 12,24,25 ஆகிய வார்டுகளுக்குட்பட்ட பூத் கிளை செயலாளர்கள், பி.எல்.ஏ.2 நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சிறுபூலுவப்பட்டியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சிறுபூலுவப்பட்டி பகுதி செயலாளர் தங்கராஜ் தலைமை தாங்கினார். திருப்பூர் வடக்கு தொகுதி கே.என். விஜயகுமார் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார்.
திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், தேர்தல் தொகுதி பொறுப்பாளர் தாமோதரன் எம்.எல்.ஏ, மாநில அமைப்புச்செயலாளர் சிவசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். கூட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ பேசியதாவது: தி.மு.க. உங்களுடன் ஸ்டாலின் என்று கூறி மக்களை திசை திருப்புகின்றனர். அப்படியென்றால் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இவ்வளவு நாள் எங்கு சென்றிருந்தார்.
திருப்பூர் மக்கள் தி.மு.க. ஆட்சியை திருப்பி அனுப்பமுடிவு செய்து விட்டனர். 2026 தேர்தலுக்கு பிறகு தி.மு.க. காணாமல் போய்விடும். தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் தாலிக்கு தங்கம் திட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்படும். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்பூர் சுற்றுப்பயணத்தில் 2 லட்சம் பேர் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி, கொறடா கண்ணப்பன், பகுதி செயலாளர்கள் கருணாகரன், ஹரிகரசுதன், நாச்சிமுத்து, வார்டு செயலாளர்கள் கார்த்திகேயன், மாணிக்கம், ஆறுமுகம், ரவி, 15 வேலம்பாளையம் கூட்டுறவு கடன் சங்க முன்னாள் தலைவர் வி.கே.பி. மணி, சோளிபாளையம் மணி கணேசன் சேகர் பாபு, சாமுண்டிபுரம் கோழிக்கடை சிவா, 25 பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பகுதி துணை செயலாளர் நன்றி கூறினார்.