நாகர்கோவில், அக்டோபர் 28 –
உதவி பேராசிரியர் நியமனத்திற்கு பணி அனுபவ சான்று பதிவேற்றம் செய்தல் தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2, 708 உதவி பேராசிரியர் காலி பணியிடங்கள் நேரடி நியமனம் பணி அனுபவ சான்று பதிவேற்றம் செய்தல் வேண்டும். ஏற்கனவே காலி பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ள, விண்ணப்பிக்கும் நிலையில் உள்ள விண்ணப்பத்தாளர்கள் தங்களின் பணி அனுபவ சான்றிதழ் சமர்ப்பித்தல் தொடர்பான கோரிக்கைகளின் அடிப்படையில் கல்லூரி கல்வி ஆணையரிடம் இருந்து பெறப்பட்ட தெளிவுரையின்படி பிற்சேர்க்கை வெளியிடப்பட்டுள்ளது.
பணி அனுபவ சான்றிதழில் உரிய அலுவலரிடம் கையொப்பம் பெற்ற பின்பு, அச் சான்றிதழில் கல்லூரி கல்வி இணை இயக்குனர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவர்களின் நலன் கருதி 16-10-2025ல் கொடுக்கப்பட்டுள்ள விபரம் நீக்கம் செய்து பணி அனுபவ சான்றிதழ் மற்றும் உரிய அதிபர்கள் வழங்கப்பட்டுள்ளன.
எனவே அரசு, அரசு உதவி பெறும் தனியார் கலை மற்றும் அறிவியல், மருத்துவம், பொறியியல், கல்வியியல் கல்லூரிகளில் பணிபுரிபவர்கள் பணி அனுபவ சான்றிதழ், இந்திய பல்கலைக்கழகம் மற்றும் நிகழ்நிலை பல்கலைக்கழகங்களில் பணிபுரிபவர்களுக்கான பணி அனுபவ சான்றிதழ், வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கான பணி அனுபவ சான்றிதழ் மற்றும் அவை சார்ந்து தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளின் படி உரிய அலுவலரிடம் கையொப்பம், சான்றோப்பம் பெற்று பதிவேற்றம் செய்ய விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


