கிருஷ்ணகிரி, செப்.05.
கிருஷ்ணகிரி பெரிய ஏரிக்கரையோரம் அமைந்துள்ள அருள்மிகு காலபைரவர் திருக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி மற்றும் 816-ம் ஆண்டு பாலபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி திருக்கோவிலில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹுதி உள்ளிட்ட பல்வேறு யாக பூஜைகளும், ஸ்ரீ காலபைரவர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து சூரன்குட்டை, இராயக்கோட்டை, ஆலப்பட்டி, காத்தாடிகுப்பம், மல்லிநாயனப்பள்ளி, வெண்ணம்பள்ளி உள்ளிட்ட 165 கிராமங்களைச் சேர்ந்த 1008 பெண்கள் பால்குடங்களுடன் ஊர்வலமாக பங்கேற்றனர். கிருஷ்ணகிரி தர்மராஜா திருக்கோவிலில் இருந்து தொடங்கிய பால்குட ஊர்வலத்தில் கரகாட்டம், மயிலாட்டம், கும்பியாட்டம், சேவையாட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
பல்வேறு கிராமங்கள் வழியாக சென்ற ஊர்வலம், ஏரிக்கரையோரம் அமைந்துள்ள காலபைரவர் திருக்கோவிலை வந்தடைந்தது. பின்னர் 1008 பால்குடங்களில் கொண்டுவரப்பட்ட பால் மூலம் ஸ்ரீ காலபைரவர் சுவாமிக்கு சிறப்பு பாலபிஷேகம் நடைபெற்றது.
இந்த விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத், முன்னாள் சபாநாயகர் தம்பிதுரை, சட்டமன்ற உறுப்பினர் முகுந்தன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ஸ்ரீ காலபைரவர் மற்றும் ஸ்ரீ சீத்தபைரவர் சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமிகளை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர். விழாவையொட்டி சுமார் 10 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 165 கிராமங்களைச் சேர்ந்த ஊர் கவுண்டர்கள் மற்றும் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் இணைந்து விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.



