நாகர்கோவில், ஜூலை 9 –
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் கிராமப்புறங்களில் 5 கிலோமீட்டர் அருகில் மக்கள் சென்று அஞ்சல் சேவையை பெறும் விதமாக புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 3000 க்கும் மேற்பட்ட கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் அஞ்சல் சேவையை முழுமையாகப் பெறும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி தோவாளை தாலுகா அழகியபாண்டிபுரம் ஊராட்சியில் 7/7/2025 அன்று வீரப்புலி (R.F) என்கிற புதிய கிளை அஞ்சல் அலுவலகம் தென்மண்டல அஞ்சல்துறை தலைவர் ஜெயசங்கர் திறந்து வைத்தார். விழாவின் தொடக்கமாக அருமநல்லூர் கிளை அஞ்சலக அலுவலர் நிஷா தேவி வரவேற்புரை வழங்கினார். வீரபுலி சிஎஸ்ஐ சபை போதகர் ஞானசெல்வராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
இதில் கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் க. செந்தில்குமார் வீரபுலி பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அஞ்சல் துறை சார்ந்த சேமிப்புத் திட்டங்கள் மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்து சிறப்புரை வழங்கினார். இறுதியாக நாகர்கோவில் மேற்கு உபகோட்ட கண்காணிப்பாளர் நிதீஷ் நன்றியுரை வழங்கினார்.
இதன் மூலம் இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி, அஞ்சலக சேமிப்பு திட்ட சேவைகள் பெறுவது முதல் அனைத்து அஞ்சல் சேவைகளையும் வீரபுலி (R.F) பகுதியைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் தெரிவித்தார்.