சென்னை, அக். 2:
ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையில் மூன்றரை வயதே ஆன குழந்தைக்கு அரிய வகை கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
குழந்தைக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்ட நிலையில், நோயெதிர்ப்பு மண்டல செல்கள் அதிகரிப்பதால் ஏற்படும் அரிய நோயான ‘லாங்கர்ஹான்ஸ் செல் ஹிஸ்டியோசைட்டோசிஸ்’ (LCH) பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், இந்நோய் குழந்தையின் கல்லீரலைக் கடுமையாக பாதித்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, உயிருடன் இருக்கும் நபரிடமிருந்து கல்லீரலின் ஒரு பகுதியை தானமாகப் பெற்று மாற்று அறுவை சிகிச்சை செய்யும் முறையில், குழந்தையின் தந்தையின் கல்லீரலின் ஒரு பகுதி குழந்தைக்கு பொருத்தப்பட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து குழந்தைகள் கல்லீரல் மருத்துவம் மற்றும் கல்லீரல் மாற்று சிகிச்சைப் பிரிவு மூத்த ஆலோசகர் டாக்டர் சோமசேகரா கூறுகையில், குழந்தையின் கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததுடன், தொடர்ந்து நோய்த்தொற்றுகள் ஏற்பட்டதாக தெரிவித்தார். மேலும், குறைந்த அளவு கீமோதெரபி சிகிச்சை அளித்ததுடன், சிறுநீரகப் பாதிப்புக்கும் முதலில் சிகிச்சை அளித்த பின்னரே கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.
ரத்தவியல் மற்றும் புற்றுநோய் மருத்துவம், கல்லீரல் மற்றும் கல்லீரல் மாற்று சிகிச்சை, சிறுநீரக மருத்துவம் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் ஒருங்கிணைந்து குழுவாக செயல்பட்டதன் மூலம் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகவும், தற்போது குழந்தை முழுமையாக குணமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கல்லீரல் மாற்று மற்றும் ஹெச்பிபி அறுவை சிகிச்சை குழு இயக்குநர் டாக்டர் மெட்டு ஸ்ரீனிவாஸ் ரெட்டி கூறுகையில், மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பு குழந்தையின் உடல்நிலையை சீராக்குவதுடன், தொடர்ந்து ஏற்பட்ட நோய்த்தொற்றுகள் மற்றும் பிறவியிலேயே இருந்த சிறுநீரகப் பாதிப்புக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டியிருந்ததாக தெரிவித்தார். அறுவை சிகிச்சைக்கு குழந்தையை தயார்படுத்துவது மிகவும் முக்கியமானதாக இருந்ததாகவும் அவர் கூறினார்.
செய்தியாளர் சந்திப்பில் குழந்தைகள் சிறுநீரக மருத்துவம் மற்றும் சிறுநீரக மாற்று சிகிச்சைத் துறை மூத்த ஆலோசகர் டாக்டர் பிரஹலாத், குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணரும் சிறுநீரக மருத்துவருமான டாக்டர் நந்தினி ஆசியோர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



