நாகர்கோவில், ஆகஸ்ட் 5 –
குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட தர்மபுரம் ஊராட்சியில் 2020 -ம் ஆண்டு முதல் 2025 -ம் ஆண்டு ஜனவரி 5 வரை ஊராட்சி மன்ற தலைவராக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ரங்கநாயகி கணேசன் செயல்பட்டு வந்தார். இவர் ஊராட்சிமன்ற தலைவராக பொறுப்பு வகுத்து வந்த காலத்தில் ஊராட்சியில் நடைபெற்ற வரவு செலவு மீதான தணிக்கை அறிக்கையில் 2020-21-ம் ஆண்டு நிதி இழப்பு செய்ததாகவும் இதில் நிதி இழப்புத் தொகை 26,30,928 என இறுதி செய்யப்பட்டு 04/01/2025 அன்று மாவட்ட ஆட்சியரால் தண்டச் சான்று அறிவிக்கப்பட்டு இத்தொகையை 15 சதவீதம் வட்டியுடன் ஊராட்சி கணக்கில் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் 7 மாதங்கள் ஆகியும் தண்டச் சான்று தொகை ஊராட்சி கணக்கில் செலுத்தப்படாமலும் இருந்து வரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கநாயகி கணேசன் மீது வழக்கு பதிவு செய்து குற்ற நடவடிக்கை எடுத்து நிதி இழப்பு தொகையை பறிமுதல் செய்து ஊராட்சி கணக்கில் சேர்த்திட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதில் மக்களை பணத்தை ஏமாற்றிய முன்னாள் ஊராட்சி தலைவரை கண்டித்து கண்டன உரை நிகழ்த்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இறுதியில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை கைது செய்தனர்.
நடைபெற்ற மறியல் போராட்டத்தை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பெல்லார்மின் துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் செல்லசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் லீமா ரோஸ், அகமது உசேன், என் எஸ் கண்ணன், மாவட்ட குழு உறுப்பினர் ராஜகுமார் ஆகியோர் மறியல் போராட்டம் குறித்து விளக்கிப் பேசினர்.