ராமநாதபுரம், ஜுலை 2 –
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பில் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு மாநில தலைவர் நிர்மலா ஆலோசனையின் படி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் விமலா, பரமக்குடி தலைவர் சியா ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் துணை சுகாதார மையங்களில் தற்காலிக செவிலியர்களை தடுப்பூசிப் பணியில் ஈடுபடுத்தக் கூடாது, தற்காலிக செவிலியர் நியமனத்தை கைவிட வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி மருந்து வழங்க கூடாது, காலியாக உள்ள நான்காயிரம் கிராம சுகாதார செவிலியர் பணியிடத்தை நிரப்ப வேண்டும், கூடுதல் துணை சுகாதார நிலையங்களில் 642க்கும் கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் வழங்கப்பட வேண்டும், துணை செவிலியர் பணியிடங்களை ஒப்படைப்பு செய்வதை கைவிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பி நூற்றுக்கணக்கான செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் ராஜலட்சுமி உட்பட மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டனர்.