தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பழங்குடியினர் இளைஞர்களை ஒருங்கிணைந்து வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குவதற்கான மாணவர்களை தேர்வு செய்யும் “உங்கள் வெற்றி எங்கள் நோக்கம்” நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பழங்குடியினர் இளைஞர்களை ஒருங்கிணைத்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தோல்வி, ஐடிஐ, டிப்ளமோ பட்டப்படிப்பு முடித்த பழங்குடியினர் இளைஞர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் பதிவு பெற்ற நிறுவனங்கள் மூலம் பழங்குடியினர் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க மாணவர்களை தேர்வு செய்யும் “உங்கள் வெற்றி எங்கள் நோக்கம்” என்ற வேலைவாய்ப்பு திறன் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இளைஞர்களின் கல்விக்கு ஏற்றால்போல் திறன் மேம்பாட்டு பயிற்சியின் பாடப்பிரிவுகள் பிரிக்கப்பட்டு ள்ளன. இளைஞர்கள் சந்தேகங்களை போக்கும் விதமாக துறை அலுவலர்களால் வழிகாட்டுதல்கள் எடுத்துரைக்கப்பட்டது. இப்பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்கள் தாங்கள் விரும்பும் பாட பிரிவில் பயிற்சி பெற்று வேலை வாய்ப்புடன் தங்களது வாழ்வாதாரத்தை முன்னேற்றி கொள்வதோடு இத்தகைய அரசின் திட்டங்கள் குறித்து தங்களது கிராமத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பழங்குடியினர் நல இயக்குனரக இணை இயக்குனர் சுரேஷ், பழங்குடியினர் நல இயக்குனரக உதவி இயக்குனர் குமர குருபரன், தருமபுரி பழங்குடியினர் நலத்திட்ட அலுவலர் கண்ணன், கிருஷ்ணகிரி ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் ரமேஷ் குமார், துப்புரவு அலுவலர் ராஜரத்தினம், துப்புரவு ஆய்வாளர் ரமணன் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



