கன்னியாகுமரி, மார்ச் 27 –
கன்னியாகுமரி அருகே உள்ள முட்டப்பதி அய்யா வைகுண்டசாமி கோவிலில் பங்குனி தேரோட்ட திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா அடுத்த மாதம் 6ம் தேதி வரை 11 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.
இன்று அதிகாலை 5.30 மணிக்கு திருக்கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கொடி பட்டம் மேளதாளம் முழங்க பதியை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் மங்கள இசை சங்குநாதம் முழங்க அய்யா அரகரா சிவ சிவா என்ற பக்தர்கள் கோஷம் எழுப்ப கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து முட்டப்பதி திருப்பாற்கடலில் அய்யாவழி பக்தர்கள் தீர்த்தமாடி பதமிடும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் உச்சிப்படிப்பு அன்னதர்மம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு அய்யா கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி மேளதாளங்கள் முழங்க பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது.
2ம் திருவிழாவான நாளை (சனிக்கிழமை) முதல் 7 ஆம் திருவிழாவான அடுத்த மாதம் 2ஆம் தேதி வரை தினமும் பணிவிடைகள் உச்சிப் படிப்பு தர்மங்கள் மற்றும் இரவு வாகன பவனி போன்றவை நடைபெறுகிறது. நாளையும், நாளை மறுநாளும் (சனி மற்றும் ஞாயிறு) கருட வாகனத்திலும் 4 மற்றும் 5ஆம் திருவிழா அன்று கருட வாகனத்திலும், 6ஆம் திருவிழா அன்று சர்ப்ப வாகனத்திலும், 7ஆம் திருவிழா அன்று கருட வாகனத்திலும் அய்யா பவனி வரும் நிகழ்ச்சியும் 8ஆம் திருவிழா அன்று முட்டப்பதி கடலில் கலி வேட்டை நிகழ்ச்சியும் நடக்கிறது.
இதையொட்டி அன்று அதிகாலை 4 மணிக்கு பணிவிடையும் அதைத்தொடர்ந்து உகப்படிப்பும் பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பும் பால் தர்மம் போன்றவை நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு அய்யா வைகுண்டசாமி பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஊர்வலமாக புறப்பட்டு ஒற்றையால்விளை மாதவபுரம் வழியாக மீண்டும் முட்டப்பதி வரை பவனி வந்து வடக்கு வாசலுக்கு எதிரே அமைந்துள்ள கடலில் கலிவேட்டையாடும் நிகழ்ச்சி நடக்கிறது.
9 மற்றும் 10 ஆம் திருவிழா அன்று இரவு 7.30 மணிக்கு சப்பர வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. 11ஆம் திருவிழா அன்று பகல் 12 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் அதிகாலை 4:00 மணிக்கு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சியும், தான தர்மங்களும் நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை முட்டப்பதி மூத்த தர்மகர்த்தா மனோகரச் செல்வன் தர்மகர்த்தா கைலாஷ் ஆகியோர் செய்து வருகிறார்கள்.



