மார்த்தாண்டம், ஜூலை 25 –
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் விரிகோடு பகுதியில் கருங்கல் மார்த்தாண்டம் நெடுஞ்சாலையில் ரயில்வே கிராசிங் அமைந்துள்ளது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இந்த பாதையில் மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை ஏற்று கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் தற்போது ரயில்வே கிராசிங் இருக்கும் விரிகோடு பகுதியில் மேம்பாலம் அமைக்காமல் புறநகர் பகுதியில் விவசாய நிலங்கள் குடியிருப்பு கோயில்கள், தேவாலயங்கள் பாதிக்கும் வகையில் மேம்பாலம் அமைக்க அளவீடு பணிகளை துவங்கிய நேரத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர்.
தற்போது ரயில்வே கிராசிங் செயல்பட்டு வரும் விரிகோடு பகுதியில் மேம்பாலம் அமைந்தால் குடியிருப்பு விளைநிலங்கள் பாதிக்கப்படாது. அரசிற்கு பண விரயம் தவிர்க்கப்படும் என கூறி கடந்த பத்து ஆண்டுகளாக பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனாலும் மாநில அரசு அதிகாரிகள் அதை மீறி விவசாயப் பகுதியில் அளவீடு செய்ய செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டு அதிகாரிகளை திருப்பி அனுப்பி வைத்தனர்.