நாகர்கோவில், ஜூலை 6 –
மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம் முளகுமூடு பகுதியில் இயங்கி வருகிறது. இந்த அலுவலக வளாகத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்யும் நிகழ்ச்சி இன்று நடந்தது. மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் தலைமை வகித்தார். குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் முன்னிலை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்: கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி சேவையானது கடந்த 22.06.2026 முதல் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட தமிழ்நாட்டிற்குட்பட்ட 10 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிதாக வாகன ஓட்டுநர் உரிமம் பெற வரும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்கள் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திடமும், என்னிடத்திலும், குளச்சல் சட்டமன்ற உறுப்பினரிடமும் கோரிக்கை வைத்துள்ளார்கள். மக்கள் முன்வைத்த அனைத்து கோரிக்கையினையும் போக்குவரத்து துறை ஆணையர் அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.
நடைபெற்ற ஆய்வில் கல்குளம் வட்டாட்சியர் ராஜேஷ், துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



