நாகர்கோவில், மே 21 –
திருவட்டார் வட்டத்துக்குட்பட்ட பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் குற்றியாறு பழங்குடியினர் நடமாடும் மருத்துவ அலகினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா இன்று (21.05.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறியப்பட்டது. மேலும் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற வந்த நோயாளிகளிடம் வழங்கப்படும் சிகிச்சைகள் முறையாக வழங்கப்படுகிறதா எனவும், அதனைத்தொடர்ந்து ஆய்வகத்தை பார்வையிட்டு, நோயாளிகளுக்கு பரிசோதனை முடிவுகள் காலதாமதமின்றி வழங்கப்படுகிறதா எனவும், மேலும், பாம்பு கடி எதிர் விஷ மருந்து, நாய் கடி தடுப்பூசி மற்றும் இம்யூனோகுளோபுலின் மருந்துகள் வழங்கப்படுகிறதா எனவும், அவற்றின் இருப்பு குறித்தும், இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு இரும்புச் சுக்குரோஸ் ஊசி வழங்கப்பட்டு அவர்களின் உடல்நிலை கண்காணிக்கப்படுகிறதா எனவும் மருத்துவரிடம் கேட்டறியப்பட்டது.
மேலும் பேச்சிப்பாறை அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வட்டார மருத்துவ அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது. பேச்சிப்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்று வரும் வர்ணப்பூச்சு பணிகளை பொதுப்பணித்துறையினர் விரைவாக மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து குற்றியார் பகுதியில் செயல்பட்டு வரும் பழங்குடியினர் நடமாடும் மருத்துவ அலகு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு மருத்துவக் குழுவினரால் வழங்கப்பட்டு வரும் சுகாதார சேவைகள் குறித்து கேட்டறியப்பட்டது என கூறினார்.
நடைபெற்ற ஆய்வில் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.நமச்சிவாயம், குட்டக்குழி வட்டார மருத்துவ அலுவலர் மரு.அருண் சந்தோஷ், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.



