மார்த்தாண்டம், ஆக. 9 –
பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் நேற்று மார்த்தாண்டத்தில் உள்ள எம்.பி அலுவலகத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டு தெரிந்து கொண்டதோடு அதிகாரிகளிடம் தொலைபேசியில் பேசி ஏராளமான பயனாளிகளுக்கு தீர்வும் காணப்பட்டது. மேலும் குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன், பொதுப்பணித்துறை மேற்பார்வையாளர் பிரம்ம சக்தி, நகராட்சி பொறியாளர் குறள் செல்வி, நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் பிரவீன்குமார் மற்றும் அதிகாரிகளை நேரில் அழைத்துப் பேசி மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் இருக்கும் கழிவறை பொதுமக்களின் வசதிக்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் நிதியில் அமைக்கப்பட்டது. அந்தக் கழிவறை தற்போது பயன்பாடின்றி காணப்படுகிறது.
அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது, மார்த்தாண்டம் நகரத்தில் உள்ள அனைத்து கழிவுநீர்களும் மார்த்தாண்டம் அட்டை குளம் கால்வாய் வழியாக கொல்லங்குளத்தில் கலப்பது, அட்டை குளத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது சம்பந்தமாகவும் மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது மக்களின் பயன்பாட்டிற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட நிகழ்வுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் பொதுமக்களின் மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் இருக்கும் கழிவறை மற்றும் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், குழித்துறை நகர்மன்ற கவுன்சிலர் ரீகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.