மார்த்தாண்டம், ஜூலை 15 –
பீகார் மாநிலம் கட்டிகார் பகுதி சேர்ந்தவர் தஜிபூர் (23). இவரது தம்பி மஜிபூர் (21). இரண்டு பேரும் மார்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தில் தங்கி கூலி தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் தஜிபூர் வேலையை முடித்துவிட்டு சற்று நேரம் ஓய்வு எடுப்பதற்காக அங்கு நின்ற பெரிய பலாமரத்தின் கீழ் அமர்ந்திருந்தார். அப்போது மரத்திலிருந்து பழுத்த பெரிய பலாப்பழம் வந்து திடீரென மரத்தின் கீழ் இருந்த தஜிபூர் தலை மீது விழுந்தது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி தஜிபூர் நேற்று உயிரிழந்தார். இது குறித்து மஜிபூர் அளித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.