தஞ்சாவூர், ஆகஸ்ட் 12 –
சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் மாநில அளவிலான போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்னும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் மாநில அளவிலான போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்னும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தஞ்சாவூர் பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரி வளாகத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், துரை சந்திரசேகரன் எம்எல்ஏ (திருவையாறு), மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளு டன் உறுதிமொழி ஏற்றனர்.
போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதை பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன். போதை பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன். போதைப் பொருள்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதை பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கு மக்கள் நல்வாழ்வுக்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என உறுதி கூறுகிறேன். உறுதி மொழியை துணை முதலமைச்சர் வாசிக்க அனைத்து மாவட்டத்திலும் உள்ள மாணவ மாணவிகள் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். மேலும் தஞ்சாவூர் பாரத் கல்லூரி வளாகத்தில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலத்தினை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
மாநிலத்தில் போதை பொருள் தடுப்பு குழுவில் சிறந்து விளங்கிய தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் பரிசு ரூபாய் 1 லட்சத்திற்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை முதலமைச்சரிடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாதவன், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) செந்தில், பாரத் கல்லூரியின் தாளாளர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் குமார், வீரபாண்டி, உதவி ஆணையர் (கலால்) ரேணுகாதேவி, உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜய லலிதாம்பிகை, தாசில்தார் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



