மயிலாடுதுறை, ஆகஸ்ட் 6 –
உத்தரகாண்ட் மாநில நிலச்சரிவு போன்ற இயற்கை இடர்பாடுகள் நிகழாமல் இருக்க வேண்டி மயிலாடுதுறை காவிரி கரை கேதார்நாத் ஆலயத்தில் தருமபுர ஆதீன மடாதிபதி ஏற்பாட்டின் பேரில் மிருத்திய மகா மந்திரம் ஓதப்பட்டு மகா ருத்ர ஹோமம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி கரையில் காசியில் இருப்பது போன்ற ஏழு விஸ்வநாதர் ஆலயங்கள் அமைந்துள்ளன. மேலும் கேதார்நாத் ஆலயமும் காவிரி கரையில் அமைந்துள்ளது. இந்த ஆலயங்களில் தர்மபுரம் ஆதீன 27-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின் பெயரில் மகா ருத்ர ஹோமம் நடைபெற்றது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் போன்று இயற்கை சீற்றங்கள் ஏற்படாமல் இருக்க இறைவனது அருளை பெறும் வகையில் ருத்ர ஹோமம் நடைபெற்றது. ருத்ர ஹோமம், சண்டியாகம் ஆகியவை செய்யப்பட்டு நோய்கள் சங்கடங்கள் தீர்க்கும் மிருதிங்கிய மகா மந்திரம் ஓதி பூர்ணாக்குதி நடைபெற்றது. தொடர்ந்து யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு ருத்ராபிஷேகம் செய்யப்பட்டது.
தருமபுரம் ஆதீன 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற ஹோமம் மற்றும் அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.



