மதுரை, செப். 29 –
மதுரை ரயில் நிலையத்தில் முன்பதிவு மற்றும் முன்பதிவு இல்லாத பயண சீட்டுக்கள் பதிவு செய்ய, குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க, ரயில் நிலையத்திற்கு உள்ளே முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு பதிவு செய்ய, இருந்த இடத்திலேயே உணவு பெற, சலுகை கட்டண பயண சீட்டு பெற போன்ற அனைத்து ரயில் சேவைகளுக்கும் ஒரே செயலியாக “ரயில் ஒன்” செயலி கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த செயலியை பிரபலப்படுத்தும் விதமாக மதுரை ரயில் நிலையத்தில் மௌன மொழி நாடகம் நடைபெற்றது. இந்த மௌன மொழி நாடகத்தை திருச்சி பல்நோக்கு மண்டல ரயில்வே பயிற்சி நிறுவன பயிற்சியாளர்கள் நடத்தினர். இதற்காக 25 பயிற்சியாளர்கள் மற்றும் பயிற்றுநர்கள் முரளிதரன், மகேஸ்வரி, ராகவேந்திரா ஆகியோர் அடங்கிய குழு மதுரைக்கு வந்திருந்தது. இந்த மௌன மொழி நாடகத்தை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம்.பிரகாஷ் மீனா, முதுநிலைக் கோட்ட வர்த்தக மேலாளர் டி.எல்.கணேஷ், கோட்ட வர்த்தக மேலாளர் டி.மோகனப்பிரியா, உதவி வர்த்தக மேலாளர் பி.மணிவண்ணன் உட்பட ஏராளமான பயணிகள் மற்றும் பொது மக்கள் பலர் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.



