ராமநாதபுரம், ஜுலை 7 –
ஊராட்சிமன்றம் முதல் நாடாளுமன்றம் வரை சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்திட வேண்டும் உள்ளிட்ட இரட்டைக் கோரிக்கை வலியுறுத்தி மதுரையில் மனிதநேய மக்கள் கட்சியின் எழுச்சிப் பேரணி மற்றும் மாநாட்டில் சாதி சமய வேறுபாடு இன்றி அனைத்து சமூக மக்கள் அலை கடலென திரண்டு பங்கேற்குமாறு தமுமுகவின் மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்சா அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் அழைப்பு அறிக்கையில் விடுத்துள்ளதாவது: சங்கம் வளர்த்த மதுரையில் எழுச்சிப் பேரணி மற்றும் மாநாடு. ஊராட்சி மன்றம் முதல் நாடாளுமன்றம் வரை சிறுபான்மையினர் பிரதிநிதித்துவத்தை உறுதி செய். வக்பு ஒழிப்பு சட்டத்தை ரத்து செய் என்ற இரட்டை கோரிக்கை வலியுறுத்தி ஜூலை 6-ம் தேதி மதுரையில் மனித நேய மக்கள் கட்சி நடத்தும் எழுச்சிப் பேரணி மற்றும் மாநாடு மதுரை வண்டியூர் டோல்கேட் மஸ்தான் பட்டி மதுரை முகமது கவுஸ் திடலில் நடைபெற உள்ளது. மாநாட்டில் மனித நேய மக்கள் கட்சி தலைவர் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா தலைமை உரை ஆற்றுகிறார். தமிழ் மையம் நிறுவனர் அருட்தந்தை முனைவர் ஜகத் கஸ்பர் ராஜ், ஜோதிமலை இறைப்பணி திருக்கூடம் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள், மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் ப. அப்துல் சமது ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.
இந்த மாபெரும் பேரணி மற்றும் மாநாட்டில் ஜாதி மதங்கள் கடந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து பொதுமக்கள் லட்சக்கணக்கானோர் அணி அணியாக அலை கடலென திரண்டு பங்கேற்கின்றனர். ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் ராமநாதபுரம் சிவகங்கை மாவட்ட மக்களை பேரணி மற்றும் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு அழைக்கிறோம். இதற்காக மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் வாகன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் ஓர் அணியாக திரண்டு குடும்பம் குடும்பமாக வருகை புரிந்து கலந்து கொள்ளுமாறு உங்களை அன்போடு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அழைக்கிறோம். இவ்வாறு அவர் அறிக்கையில் அழைப்பு விடுத்துள்ளார்.