விழுப்புரம், செப்டம்பர் 06 –
விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மகளிர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடும் வகையிலும், மகளிர்கள் தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும் செயல்படும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழுவில் உள்ள மகளிர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்துவதற்காக வங்கிக்கடனுதவிகளை தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். அதனடிப்படையில், விழுப்புரம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஆண்டுதோறும் வங்கிக் கடனுதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுக்களின் விவரம் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட வங்கிக்கடனுதவிகள் குறித்தும், வங்கிக்கடனுதவிகள் பெற்று முறையாக செலுத்திய மகளிர் சுய உதவிக்குழுக்கள் குறித்தும், வங்கிக்கடனுதவி மூலம் சுய தொழில்கள் மேற்கொண்டு வரும் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் குறித்தும், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களை சந்தைப்படுத்துதல் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களிடம் விரிவாக கேட்டறியப்பட்டது.
மேலும், சிறப்பு சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல்நிதிக்கான முன்மொழிவுகளை ஒரு வாரக்காலத்திற்குள் அனுப்ப வேண்டும் எனவும், கிராம வறுமை ஒழிப்பு நிதிக்கான முன்மொழிவுகளை வரும் 22.09.2025 அன்றுக்குள் அனுப்ப வேண்டும் எனவும், மாற்றுதிறனாளிக்களுக்கான வாழ்வாதார நிதி முன்மொழிவுகளை ஒரு மாத காலத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் எனவும், மற்றும் சமுதாய திறன் வளர்ப்பு பள்ளிகளை கண்டறிந்து ஒரு வார காலத்திற்குள் முன்மொழிவுகளை அனுப்ப வேண்டும் எனவும் அறிவுத்தப்பட்டது.
மேலும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் சுயஉதவிக்குழுக்களையும் மேம்படுத்திடும் பொருட்டு, மகளிர் சுய உதவிக்கழு உறுப்பினர்களிடம் அரசால் வழங்கப்படும் கடனுதவிகள் மற்றும் சுயதொழிலுக்காக வழங்கப்படும் கடனுதவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், சுயஉதவிக்குழுவினர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார். இந்நிகழ்வில் மகளிர் திட்டம், திட்ட இயக்குநர் செந்தில் வடிவு, உதவி திட்ட அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



