திருப்பூர், ஜூன் 18 –
மாவட்ட ஆட்சித்தலைவர் மனிஷ் நாரணவரே இன்று (18.06.2026) திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
மதுவிலக்கு (ம) ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இப்பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி தென்னம்பாளையம் வழியாக எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலை கல்லூரியில் நிறைவடைந்தது.
இப்பேரணியில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவியர்கள் கலந்து கொண்டு போதை பொருள் தடுப்பு தொடர்பான பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர். முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் போதைப்பழக்கத்தால் ஏற்படும் தீயவிளைவுகளை நான் முழுமையாக அறிவேன். தான் போதை பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன், மேலும் எனது குடுபத்தினரையும் நண்பர்களையும் போதைப்பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப்பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன்.
போதைப்பொருட்களின் உற்பத்தி நுகர்வு பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப்பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அற்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன் என அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவியர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுமொழி எடுத்துக்கொண்டார்கள்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்திகேயன், உதவி ஆணையர் (கலால்) பாலமுருகன், கல்லூரி மாணவியர்கள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.



