சேலம், ஜூலை 1 –
கிணற்று பாசனத்தை நம்பி பயிர் செய்யும் விவசாயிகள், மின் மோட்டாருக்கு மின் இணைப்பு பெற்று பயிர் செய்தனர். அவர்கள் பயன்படுத்திய மின்சாரத்திற்கு அதிக கட்டணம் மின் வாரியத்தால் வசூலிக்கப்பட்டு வந்தது. இயற்கை சீற்றம் மற்றும் பருவம் தவறிய மழையின் காரணமாக விளைச்சல் இல்லாததால் விவசாயிகளால் மின்சார கட்டணத்தை கட்டமுடியாத நிலையில் மின்சார வாரியம் விவசாயிகளுக்கு மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்தது.
தமிழக விவசாயிகள் படும் இன்னல்களை கருத்தில் கொண்டு சிதறி கிடந்த தமிழக விவசாயிகளை கடன் தொல்லை, மின்சார கட்டணம் உயர்வு போன்ற துயரங்களில் இருந்து காப்பாற்றுவதற்காக தமிழக விவசாயிகள் சங்கம் மறைந்த உழவர் பெருந்தலைவர் சி. நாராயணசாமி நாயுடு தலைமையில் உருவாக்கப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த போராட்டத்தில் தமிழக காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 53 விவசாயிகள் இறந்துள்ளனர்.
5.7.1972 அன்று நடைபெற்ற போராட்டத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்ன் பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் மீது தமிழக காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியதில் 9 விவசாயிகள் உயிரிழந்தனர். இது போல் பல இடங்களில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நடந்த போராட்டத்தில், தமிழகம் முழுவதும் விவசாயிகள் மீது தமிழ்நாடு அரசு காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தி 53 விவசாயிகளை கொன்று குவித்தது.
5.7.1972 அன்று தமிழக அரசு நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரை தியாகம் செய்த விவசாயிகளுக்கு வீர வணக்கம் செலுத்த வருகின்ற ஞாயிற்றுக்கிழமை 5.7.2026 சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பெத்தநாயக்ன்பாளையம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள தூபி பகுதிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் வருகை தந்து பேரணியில் பங்கு கொண்டு துப்பாக்கி சூட்டில் பலியான தியாகிகளின் நினைவிடத்தில் வீர வணக்கம் செலுத்த விவசாயிகள் அனைவரும் திரளாக பங்கேற்கும் படி உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வேலுசாமி அழைக்கிறார்.


