ஈரோடு, செப். 25 –
ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஓட்டுநர்களுக்கு மின்சாரம் சி.என்.ஜி, எல்.பி.ஜி மூலம் இயங்கக்கூடிய சொந்தமாக புதிய ஆட்டோ ரிக்சா தொழில்முறை டாக்சி வாகனம் வாங்க ரூ.1 இலட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தில் 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட பெண் ஓட்டுநர்கள் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் பயன்பெற சொந்தமாக ஆட்டோ, இலகுரக மற்றும் கனரக வாகனம் வைத்தில்லாத பெண் ஓட்டுநர்கள் பயன்பெறலாம். விண்ணப்பதாரர் தொழில்முறை டாக்சி வாகனம் இயக்குவதற்கான ஒட்டுநர் உரிமம் பெற்றவராக இருத்தல் வேண்டும். அவ்வாறு உள்ள பட்சத்தில் தொழிலாளியின் ஆவணங்கள் மற்றும் தகுதிகளின் அடிப்படையில் இணையவழியாக விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்தின்கீழ் ஈரோடு மாவட்டத்தில் தற்போது வரை மொத்தம் 7 பெண் ஆட்டோ ஓட்டும் பயனாளிகளுக்கு தலா ரூ.1 இலட்சம் மதிப்பில் மொத்தம் ரூ.7 இலட்சம் புதிதாக ஆட்டோ ரிக்சா வாகனம் வாங்க மானியம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


