நாகர்கோவில், ஜூலை 21 –
ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளம் ஊராட்சியில் சுமார் 64 குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்கள் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, மின் கட்டண ரசீது, வீட்டு வரி உள்ளிட்ட அனைத்து அரசு ஆவணங்களையும் வைத்துள்ளனர். இருந்த போதிலும் இதுவரை அவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை.
இது குறித்து பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டதன் பேரில் வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகளால் ஆய்வு செய்து, 64 குடும்பங்களுக்கு பட்டாக்கள் தயார் செய்யப்பட்டன.
பட்டாக்கள் தயாராகி கடந்த 4 மாதங்கள் ஆகியும் பயனாளிகளுக்கு வழங்காமல் வட்டாட்சியர் அலுவலகத்தில் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிகாரிகளின் தாமதப்போக்கை கண்டித்தும், தயாராக உள்ள வீட்டுமனை பட்டாக்களை உடனே வழங்க கோரியும் நேற்று அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு கட்சியின் குமாரி மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார்.ராஜமங்கலம் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் வருவாய் துறை நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 64 குடும்பங்களுக்கும் உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் போராட்டங்கள் தீவிரப் படுத்தப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.



