கிருஷ்ணகிரி, ஜூலை 22 –
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்திற்குட்பட்ட தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் கிருஷ்ணகிரி கோட்ட கிளை ஆலோசனைக் கூட்டம் வட்டார அளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நில அளவை மற்றும் வருவாய்த் துறையினர் எதிர்கொள்ளும் பல்வேறு பணிசார்ந்த பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு, அரசிடம் வலியுறுத்த வேண்டிய 6 முக்கிய கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவரும், கோட்ட கிளைத் தலைவருமான வே.மாவீரன் தலைமை தாங்கி, தற்போதைய கள நிலவரங்கள் குறித்துப் பேசினார். கோட்டச் செயலாளர் ப.பண்பரசு அனைவரையும் வரவேற்றுப் பேசினார். சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் நிதி நிலை குறித்து மாவட்டச் செயலாளர் மோகன் மற்றும் மாவட்டப் பொருளாளர் ந.குமரேசன் ஆகியோர் விளக்கமளித்தனர்.
முன்னாள் மாவட்ட மற்றும் கோட்ட நிர்வாகிகளான திருவாளர்கள் கோவிந்தராஜ், பெரியசாமி, செந்தில்குமார் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டு, சங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து வாழ்த்துரை வழங்கினர். கூட்டத்தின் நிறைவாக, மாவட்டத் தலைவர் அ.பெரியசாமி சிறப்புரை ஆற்ற, மாவட்ட இணைச் செயலாளர் ஜோதிபாசு அனைவருக்கும் நன்றியுரை வழங்கினார்.
நில அளவை அலுவலர்களின் தகுதியை மேம்படுத்தும் வகையில், அவர்களுக்குப் பவானிசாகர் அரசு அடிப்படைப் பயிற்சியை விரைந்து வழங்க அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்மையில் பதவி உயர்வு பெற்றுள்ள குறுவட்ட அளவர்களுக்கு (Firka Surveyors), அதற்கான ஊதிய உயர்வுப் பலன்களைத் தாமதமின்றி உடனடியாக வழங்கிட வேண்டும். பட்டா மாறுதல் உள்ளிட்ட பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் ‘வெப்-கொலாப்லேண்ட்’ (web-Collabland) இணையதளத்தில் உள்ள தொழில்நுட்பக் குறைபாடுகளை ஆன்லைன் சேவைகள் தடையின்றி கிடைக்க உடனடியாகக் களைய வேண்டும்.
களப்பணியாளர்களின் அன்றாட பணி இலக்குகளை முறைப்படுத்தி, அவர்களின் மிகையான பணிச்சுமையைக் குறைக்க வேண்டும். துணை ஆய்வாளர்களின் (டெபுடி இன்ஸ்பெக்டர்ஸ் ) பணி மாறுதல் மற்றும் இடமாற்றங்களை எவ்விதப் பரிந்துரையுமின்றி, வெளிப்படையான கலந்தாய்வு (Counselling) முறையிலேயே நடத்த வேண்டும். குறுவட்ட அளவில் உள்ள AFS-log மென்பொருள் அமைப்பில், வட்ட அளவில் உள்ள கிராமங்களைத் தனியாகப் பிரித்து வழங்கிட அரசு நிர்வாகம் ஆவண செய்ய வேண்டும்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகல்கள், அடுத்தகட்ட நடவடிக்கைக்காகச் சங்கத்தின் மாநிலத் தலைமைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான நில அளவை அலுவலர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.



