திண்டுக்கல், ஜூன் 3 –
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் (EDII) சார்பில், (Project SANKALP) சங்கல்ப் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்ட பெண்களுக்கான 20 நாட்கள் இலவச சிறுதானிய உணவுப்பொருட்கள் தயாரித்தல் பயிற்சி துவங்கியது.
இப்பயிற்சியில் சிறுதானிய லட்டு, சத்துமாவு, தோசை மிக்ஸ், இடியாப்பம் மிக்ஸ், பஞ்சு மிக்ஸ், சூப் மிக்ஸ், பிஸ்கட், பிரவுனி உள்ளிட்ட பல்வேறு சிறுதானிய மதிப்புக்கூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரித்தல் குறித்து நேரடி செய்முறை பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும், விவசாய விளைபொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல், ஊறுகாய், ஜாம், தொக்கு தயாரித்தல், விற்பனைத் திறன் மேம்பாடு மற்றும் தொழில் தொடங்குவதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்படுகின்றன.
பயிற்சியின் ஒரு பகுதியாக, தஞ்சாவூரில் அமைந்துள்ள தேசிய உணவு தொழில்நுட்ப மற்றும் தொழில் முனைவோர் மேலாண்மை நிறுவனம் (NIFTEM) சென்று தொழில்நுட்ப மற்றும் தொழில் சார்ந்த நேரடி கள ஆய்வும் மேற்கொள்ளப்பட உள்ளது.
நிகழ்ச்சியின் துவக்க விழாவில் தொழில் முனைவு அலுவலர் அசோக் வரவேற்புரை வழங்கினார். திட்ட மேலாளர் சத்யராஜ் தயாளன் குத்துவிளக்கேற்றி பயிற்சியை துவக்கி வைத்தார். தொடர்ந்து தமிழ்நாடு மகளிர் வாழ்வாதார மேம்பாட்டு மையத்தைச் சேர்ந்த விண்ணரசி மற்றும் PMFME மாவட்ட வள அலுவலர் ரமேஷ்குமார் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து, வளர்ந்து வரும் பெண் தொழில்முனைவோர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பயிற்றுநரும் பெண் தொழில்முனைவோருமான நாக ரோகினி சிறப்பாக மேற்கொண்டிருந்தார். இந்நிகழ்ச்சியில் 40-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். பயிற்சி நிறைவில் பங்கேற்பாளர்களுக்கு இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் (EDII) சான்றிதழ் வழங்கப்படுகின்றன.



